தமிழரின் சிறு தானிய உணவு வகைகள் : பாகம் -2

மூத்தக்குடியாம் தமிழ்க்குடி நோய் நொடியற்ற குடியாக இருக்கவேண்டும். உணவிகளில் சிறு தானியங்களை வைத்து பலவிதமாக சமைக்கும் குறிப்புகளை கீழே தொகுத்துள்ளேன். அரிசி , கோதுமை மட்டுமே சேர்ப்பதை தவிர்த்து, சிறு தானியங்களையும் பாரம்பரியமிக்க அரிசி வகைகளையும் உண்டு நோயற்ற வாழ்வை பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பாகம் -1

இந்த பதிவை இரண்டுமுறை பதிவிடத்தில் 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பகிர்ந்தனர் ஆனால் எத்தனை தாய்மார்கள் / மனைவிமார்கள் தமிழரின் சிறுதானிய உணவை சமைத்து குடும்ப ஆரோகியத்தை பேணுகின்றனர் என்று தெரியவில்லை. ஏன் பெண்கள் தான் சமைக்க வேண்டுமா என கேட்பது புரிகிறது. பெண்களுக்கு இருக்கும் கைப்பக்குவம் ஆண்களுக்கு இருப்பதில்லை…எப்படியெல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டியிருக்கிறது… ஈ…ஈ….

சரி கீழே புதிய வகை சிறு தானிய உணவுகளை, பானகங்களை பார்ப்போம். அதற்கும் முன் தலைவர்.வே.பிரபாகரனை பற்றி ஒரு சுவாரசிய செய்தி……..

தமிழன தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் போராளிகளுக்கு தரும் உணவில் அதிக அக்கறை செலுத்தியிருக்கிறார். கடைநிலை போராளிகளிற்கும் போதுமான கேலோரியுடன் கூடிய உணவு கிடைக்கிறது என்பதை உறுதி செய்த பின்னர்தான் அவரது உணவிற்கான ஒதுக்கீடுகளை செய்யுமாறு நிதித்துறையின் வழங்கல் பகுதிக்கு பணிக்கப்பட்டிருந்தது.

அதுமட்டுமின்றி தலைவர் தன்னுடன் உள்ளவர்கள் அனைவரையும் விதவிதமான உணவை சாப்பிட வைத்து அழகு பார்ப்பவர். சிலசமயங்களில் போராளிகளிற்கு தலைவர் பிரபாகரனே வித்தியாசமான உணவு சமைத்து வழங்குவார். அவர் சமையல் செய்தால் போராளிகள் அனைவரும் உற்சாகம் ஆகிவிடுவார்கள் ஏன் என்றால் அவ்வளவு ருசியாக சமைப்பார்.

ஒருநாள் கறி சரியில்லையாம். தலைவரின் வெளிவட்ட பாதுகாப்பு முகாம் அது. ‘இப்படியெல்லாம் சாப்பிட முடியாது. அண்ணை வைக்கிற கறி மாதிரி இருக்க வேண்டும்’ என போராளிகள் கறித்தாச்சியை கவிழ்த்து ஊற்றிவிட்டார்கள்.

இது சர்ச்சையாகி,விடயம் தலைவர் வரை உடனடியாக சென்றுவிட்டது. அவர் உடனடியாக அங்கு சென்று, முதலில் போராளிகளை கண்டித்திருக்கிறார். இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் நடக்கக்கூடாதென கண்டித்தவர், பொறுப்பாளரையும் கண்டித்திருக்கிறார். நன்றாக சமைத்து கொடுக்க வேண்டுமென அவருக்கு கூறிவிட்டு, அன்றுதலைவரின் தலைமையிலேயே கறி வைக்கப்பட்டது.

“இதுக்காக மூன்று நேரமும் நான்தான் வந்து கறி வைக்க வேணுமென்டு அடம்பிடிச்சு என்னை சமையல்காரனாக்கிப் டபோடாதையுங்கோ” என கூறியதும் அனைவரும் உரத்த சிரித்துவிட்டனர்.

தலைவர் எப்படி போராளிகள் மன வலிமையுடன் உடல் வலிமையில் அதிகம் கவனம் செலுத்தினாரோ அதே போல் ஒவ்வோர் தமிழரும் தங்கள், தங்கள் குடும்பத்தினரின் ஆரோகியத்தை பேணவேண்டும்.

பாகம் -2 உணவு வகைகளை பார்ப்போம்:

1) கர்ப்பிணிகளுக்கு இஞ்சி பானகம் :

தேவையானவை:

துருவிய இஞ்சி, எலுமிச்சை சாறு – தலா 2 தேக்கரண்டி, வெல்லம் – ஒரு தேக்கரண்டி அல்லது வெல்லம் / கருப்பட்டி – 2 தேக்கரண்டி, உப்பு – அரை சிட்டிகை, நீர் – 250 மி.லி.

செய்முறை:

துருவிய இஞ்சியை நீரில் நன்றாகக் கொதிக்கவிடவும். இறக்குவதற்கு முன் வெல்லம் / கருப்பட்டி சேர்த்து வடிகட்டவும். இதில் எலுமிச்சை சாறு, உப்பு, தேவையான அளவு சுத்தமான தண்ணீர் சேர்த்துப் பருகவும். இதை காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் அருந்துவது நல்லது.

நன்மைகள்:

மசக்கை நேரத்துக்கு உகந்த பானம். பசியைத் தூண்டும், நாக்குக்கு ருசியைக் கொடுக்கும். வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தும்.

2) கர்ப்பிணிகளுக்கு முள்ளங்கி சோள சப்பாத்தி :

தேவையானவை:

முள்ளங்கி – 1, சோள மற்றும் கோதுமை மாவு – முக்கால் கிண்ணம், சோயா மாவு – 2 தேக்கரண்டி, மிளகுத் தூள் – ஒரு தேக்கரண்டி, உப்பு, கலப்பு எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

முள்ளங்கியைத் துருவி, மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்திக்கு மாவு பிசையவும். கலப்பு எண்ணெய் விட்டு சப்பாத்தியாக சுட்டெடுக்கவும். இதற்கு கலவைக் காய் குழம்பு ருசியாக இருக்கும்.

நன்மைகள்:

முள்ளங்கியில் இரும்பு சத்து சத்து, கோலின் எனப்படும் வைட்டமின் அதிகம் உள்ளது. கோலின், சிசுவின் மூளை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. சோயா மாவு சிறந்த ஆன்டிஆக்ஸிடென்ட். கோதுமை மாவில் புரதம், வைட்டமின்கள் மற்றும் இரும்பு சத்து உள்ளிட்ட தாது உப்புகள் உள்ளன.

3) கேழ்வரகு வேர்க்கடலை அல்வா :

100 கிராம் கேழ்வரகு மாவை நன்றாக வாசனை வரும் வரை வறுக்கவும். பிறகு ஆறவைத்து, தண்ணீர் சேர்த்து, தோசை மாவுப் பதத்தில் கலக்கவும். கடாயில் ஒரு கிண்ணம் பாலை ஊற்றி, கொதித்ததும் 100 கிராம் நறுக்கிய பூசணித் துண்டுகளைச் சேர்த்து நன்றாக வேகவைக்கவும். இதில், கால் கிலோ வெல்லம் / கருப்பட்டி , கரைத்து வைத்த கேழ்வரகு மாவை சேர்த்து, தேவையான அளவு நெய் ஊற்றிக் கிளறவும். ஒரு தேக்கரண்டி நெய்யில் தோல் நீக்கிய 100 கிராம் வேர்க்கடலை, தேங்காய்த் துண்டுகள், முந்திரித் துண்டுகளை வறுத்து, அல்வாவில் சேர்த்து, கிளறிப் பரிமாறவும்.

பலன்கள்

நார்ச்சத்து, இரும்புச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளதால், குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனியாகச் செய்து தரலாம். உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும். இளம் தாய்மார்களுக்கு, தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தும். ரத்தசோகையைத் தடுக்கும்.

4) சாமை மாம்பழக் கேசரி :

தேவையான பொருட்கள்:

சாமை அரிசி-ஒரு கிண்ணம், மாம்பழத் துண்டுகள்-அரை கிண்ணம், வெல்லம் / கருப்பட்டி -அரை கிண்ணம், முந்திரி, திராட்சை-சிறிதளவு, நெய்-2 மேசைக் கரண்டி.

செய்முறை:

ஒரு கிண்ணம் சாமை அரிசியுடன் 3 கிண்ணம் நீர் சேர்த்து வேகவிடவும். வெந்ததும் வெல்லம் / கருப்பட்டி சேர்க்கவும். நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையைச் சேர்த்து, நெய் ஊற்றிக் கிளறவும். பாதி மாம்பழத் துண்டுகளைச் சேர்த்து கிளறி, 5 நிமிடம் குறைந்த தீயில் வைத்து இறக்கவும். மீதி மாம்பழத் துண்டுகளைச் சேர்த்து, அலங்கரித்துப் பரிமாறவும்.

5) கேழ்வரகு இனிப்பு அடை :

தேவையானவை:

கேழ்வரகு மாவு – ஒரு கிண்ணம், வெல்லம் – முக்கால் கிண்ணம், தேங்காய் துருவல் – கால் கிண்ணம், ஏலக்காய்த்தூள் – கால் தேக்கரண்டி, நெய்யில் வறுத்து பொடித்த முந்திரி – 2 மேசைக் கரண்டி, நெய் – தேவையான அளவு.

செய்முறை:

வெல்லத்துடன் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்கவிட்டு, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்கவிடவும். வெல்லக் கரைசல் சற்று கெட்டியானதும், அதனுடன் தேங்காய் துருவல் சேர்க்கவும். பிறகு கேழ்வரகு மாவு, ஏலக் காய்த்தூள், பொடித்த முந்திரி சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். வாழை இலையில் நெய் தடவி, மாவை சற்று கனமான அடைகளாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் நெய் விட்டு வேகவிட்டு எடுக்கவும்.

6) கேழ்வரகு குலுக்கு ரொட்டி :

தேவையானவை:

கேழ்வரகு மாவு – ஒரு கிண்ணம், பச்சரிசி மாவு – 2 மேசைக் கரண்டி, பொடித்த வெல்லம் – அரை கிண்ணம், வறுத்த வேர்க்கடலை – 2 மேசைக் கரண்டி, ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, நெய் – தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:

கேழ்வரகு மாவை இளம்பதமாக வறுத்து..பச்சரிசி மாவு, உப்பு சேர்த்து கலக்கவும். அதில் தேவையான நீர் விட்டு நன்கு பிசையவும். மாவை தோசைக்கல்லில் கனமான அடைகளாக தட்டி, சுற்றிலும் நெய் விட்டு, வெந்ததும் எடுத்து, சின்னச் சின்ன துண்டுகளாக செய்து கொள்ளவும்.

வெல்லத்துடன் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி, தேன் பதம் வந்ததும் ஒன்றிரண்டாக பொடித்த வேர்க்கடலை, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். இதில் கேழ்வரகு ரொட்டித் துண்டுகளை சேர்த்துப் பரிமாறவும். இரும்புச்சத்து கொண்ட இந்த ரொட்டி, வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

7) கொள்ளு இனிப்பு உருண்டை :

தேவையானவை:

கொள்ளு – ஒரு கிண்ணம், பொடித்த வெல்லம் – முக்கால் கிண்ணம், ஏலக்காய்த்தூள் – கால் தேக்கரண்டி, தேங்காய் துருவல் – கால் கிண்ணம், நெய் – சிறிதளவு.

செய்முறை:

வாணலியில் நெய் விட்டு கொள்ளை இளம்பதமாக வறுத்து எடுத்து, அழுத்தப் பாத்திரத்தில் ஒரு விசில் வரும் வரை வேகவிட்டு எடுக்கவும். பிறகு, நீரை நன்கு வடித்து… பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து மின் அம்மியில் ஒரு சுற்று சுற்றவும். இதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறி, சின்னச் சின்ன உருண்டைகளாக பிடித்து சாப்பிடக் கொடுக்கவும்.

8) கேழ் வரகு இனிப்பு உருண்டை :

தேவையானவை: கேழ் வரகு மாவு – ஒரு கிண்ணம், பொடித்த வெல்லம்/ கருப்பட்டி – முக்கால் கிண்ணம், வேர்க்கடலை – கால் கிண்ணம், எள் – 2 மேசைக் கரண்டி.

செய்முறை: வேர்க்கடலை, எள் இரண்டையும் வாணலியில் இளம்பதமாக வறுத்து, மின் அம்மியில் ஒன்றிரண்டாக பொடிக்கவும். கேழ்வரகு மாவில் சிறிதளவு நீர் விட்டு நன்கு பிசைந்து கனமான ரொட்டியாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு சுட்டெடுத்து ஆறியதும் மின் அம்மியில் பொடித்துக் கொள்ளவும். இதனுடன் பொடித்த வேர்க்கடலை – எள், வெல்லம் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இதை கிண்ணத்தில் போட்டு, கரண்டி வைத்து பரிமாறலாம் அல்லது உருண்டை பிடித்து சாப்பிடக் கொடுக்கலாம்.

9) கேழ்வரகு புட்டு :

தேவையானவை: கேழ்வரகு – 200 கிராம், சிவப்பு அரிசி – 100 கிராம், தேங்காய் துருவல் – ஒரு கிண்ணம், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, நறுக்கிய வாழைப்பழத் துண்டுகள் – சிறிதளவு, வெல்லத்தூள் அல்லது வெல்லம் / கருப்பட்டி – ஒரு கிண்ணம், நெய் – ஒரு தேக்கரண்டி.

செய்முறை: கேழ்வரகு, சிவப்பு அரிசி இரண்டையும் சேர்த்து ரவை பதத்தில் பொடித்துக் கொள்ளவும். தண்ணீரை இளம்பதமாக சூடாக்கி, மாவில் தெளித்து பிசிறிக் கொண்டு, இட்லித் தட்டின் மேல் ஒரு துணியை நனைத்துப் பிழிந்து போட்டு, மாவை போட்டு மூடி வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். நன்கு வெந்ததும், ஒரு தட்டில் கொட்டி உதிர்த்து நெய், தேங்காய் துருவல், நறுக்கிய பழத் துண்டுகள், வெல்லத்தூள் (அ) வெல்லம் / கருப்பட்டி , ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். குறிப்பு: மாவை இட்லித் தட்டில் வைக்காமல், புட்டு குழலில் நிரப்பியும் வேகவிட்டு எடுக்கலாம்.

10) கேப்பைக்கூழ் :

தேவையானவை: கேழ்வரகு மாவு – 100 கிராம், மோர் மிளகாய் – 3, மோர் (சிறிது புளிப்பாக) – 500 மில்லி, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை தேக்கரண்டி, பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய் – 6 தேக்கரண்டி, உப்பு – தேவையான அளவு. செய்முறை: மோருடன் உப்பு, கேழ்வரகு மாவு சேர்த்து கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு… கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து, மோர் மிளகாயைக் கிள்ளிப் போட்டு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். கரைத்த மாவை இதில் ஊற்றி, கூழ் பதமாக கிளறி இறக்கவும்.

குறிப்பு: கேப்பைக்கூழுக்கு, நறுக்கிய பச்சை வெங்காயம் தொட்டுச் சாப்பிட… ருசியோ ருசி!

11) தானிய வடை :

தேவையானவை: முளைகட்டிய கொள்ளு, முளைகட்டிய சோளம், மொச்சை (ஊற வைத்தது) – தலா 100 கிராம், காய்ந்த மிளகாய் – ஒன்று, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பொடியாக, நறுக்கிய புதினா, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் – 500 மில்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கொள்ளு, சோளம், மொச்சை, காய்ந்த மிளகாய், தோல் சீவி நறுக்கிய இஞ்சி, உப்பு எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து கெட்டியாக அரைக்கவும். இதனுடன் கொத்த மல்லி, புதினா சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும். குறிப்பு: தக்காளி சட்னி, தேங்காய் சட்னி இதற்கு சிறந்த பொருத்தம்.

12) கேழ்வரகு கார அடை :

தேவையானவை: கேழ்வரகு மாவு – 2 கிண்ணம், முருங்கைக்கீரை (உருவியது) – அரை கிண்ணம், பச்சரிசி மாவு – கால் கிண்ணம், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – கால் கிண்ணம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – ஒரு தேக்கரண்டி, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் – 2, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கேழ்வரகு மாவு, பச்சரிசி மாவை ஒன்று சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து… நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கைக்கீரை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். இதை மாவில் போட்டு… தேவையான உப்பு, வெதுவெதுப்பான நீர் சேர்த்துப் பிசைந்து, தவாவில் சற்று கனமான அடைகளாகத் தட்டி, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

13) கம்பு அடை :

தேவையானவை: கம்பு – 2 கிண்ணம், வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை – 2 ஆரக்கு, பச்சை மிளகாய் – 4, கடுகு – அரை தேக்கரண்டி, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். கம்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து நன்கு கழுவி, சிறிதளவு உப்பு சேர்த்து, நீர் விடாமல் மின் செக்கில் அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, மாவில் சேர்த்துப் பிசைந்து, தோசைக்கல்லில் அடைகளாகத் தட்டி, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். கம்பை உலரவிட்டு, அறவை இயந்திரம் கடையில் கொடுத்து மாவாக்கி பயன்படுத்தியும் இதைச் செய்யலாம்.

14) தினை, எள் சாதம் :

செய்முறை: ஒன்றரை கிண்ணம் தினையை இரண்டரை கிண்ணம் தண்ணீர் விட்டு நன்றாக வேக வைக்கவும். வெந்த தினை சாதத்தை ஒரு தட்டில் பரப்பி ஆறவிடவும். சிறிது நல்லெண்ணெயில் 150 கிராம் எள், 5 காய்ந்த மிளகாய், 50 கிராம் உளுத்தம் பருப்பு, அரை தேக்கரண்டி பெருங்காயத் தூள் சேர்த்து வறுத்து, மின் அம்மியில் பொடிக்கவும். ஒரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு, அரை தேக்கரண்டி கடுகு, சிறிது உளுத்தம் பருப்பு, 50 கிராம் வேர்க்கடலையைப் போட்டுத் தாளிக்கவும். இதில், தினை சாதத்தைப் போட்டு, எள்ளுப் பொடியைத் தூவி, கிளறி இறக்கவும்.

பலன்கள் :

தினையோடு, எள் சேர்ப்பதால், இரும்பு சத்து நிறைவாகக் கிடைக்கும். இதனால், எலும்புகள் நன்றாக உறுதியாகும். இதயத்தை பலப்படுத்தும். சிறுநீரைப் பெருக்கும். தேவையான புரதச்சத்து கிடைப்பதால், உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். வாயு, கபத்தைப் போக்கும்.

15) வரகு கஞ்சி :

செய்முறை: சுத்தம் செய்த கால் கிண்ணம் வரகு அரிசியை ஒரு குவளை தண்ணீரில் வேக வைக்கவும். பாதி அளவு வெந்ததும், உரித்த பூண்டு பல் 10, ஒரு துண்டு சுக்கு, கால் தேக்கரண்டி சீரகம், வெந்தயம், ஒரு குவளை பால் சேர்த்து வேகவிடவும். நன்றாக வெந்ததும் தேவையான உப்பு சேர்த்துக் கலக்கி இறக்கவும்.

இதற்கு தொட்டுக் கொள்ள, கறிவேப்பிலை துவையல் அருமையாக இருக்கும்.

பலன்கள்: நார்ச்சத்து மிக அதிகம். மாவுச்சத்தும் குறைந்த அளவே இருப்பதால் ஆரோக்கியத்துக்கு நல்லது. புரதம், இரும்பு சத்து, வைட்டமின் பி, தாது உப்புக்கள் நிறைய உள்ளன. விரைவில் செரிமானம் அடைவதுடன், உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கும். தினமும் வரகு, பூண்டு பால் கஞ்சியை அருந்துவதன் மூலம், நோய்களை விரட்டலாம். உடலைத் திடகாத்திரமாக வைத்திருக்கலாம்.

16) சிறுதானிய தோசை:

செய்முறை:

கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசிப் பயறு, குதிரைவாலி, சாமை அரிசி, வரகரிசி ஆகியவற்றை தலா கால் கிலோ எடுத்துக்கொள்ளவும். இதனுடன், தோலுடன்கூடிய முழு கறுப்பு உளுத்தம்பருப்பு, கொண்டைக்கடலை தலா 4 தேக்கரண்டி அளவுக்குச் சேர்க்கவும். இவற்றை காலை முதல் மாலை வரை தண்ணீரில் ஊறவைக்கவும். நன்றாக ஊறியதும், தண்ணீரை வடித்து, இரவு, ஒரு வெள்ளைத் துணியில் கட்டிவைக்கவும். காலையில் முளை கட்டி இருக்கும். இதனுடன், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு அடையாகத் தட்டி, அதன் மேல் முருங்கைக் கீரையைத் தூவி, இருபுறமும் சுட்டு எடுத்தால், சுவையான அடை தயார்!

பலன்கள்:

கேழ்வரகும், கம்பும் ரத்தத்தில் உள்ள இரத்தக் கொழுப்பைக் (கொலஸ்ட்ராலை) கட்டுப்படுத்த உதவுகின்றன. குதிரைவாலி, இதய நோய் உள்ளவர்களுக்கு நல்ல உணவு. கேழ்வரகில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், வெல்லம் / கருப்பட்டி யின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. சாமை, முதுகெலும்பு வலியைக் குறைக்கும். வரகு, உடல் பருமன், மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

17) சோள ரவை கொழுக்கட்டை :

செய்முறை:

கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும். இதில், கறிவேப்பிலைச் சேர்த்து, மூன்று கிண்ணம் தண்ணீரை விடவும். பெருங்காயத்தைத் தண்ணீரில் கரைத்து ஊற்றி, தேங்காய்த் துருவல், உப்பு போட்டு கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாகக் கொதித்ததும், ஒரு கிண்ணம் சோள ரவையைப் போட்டு, அடுப்பை தீயை கம்மியாக வைக்கவும். அடிக்கடி திறந்து கிளறிவிடவும்.

மாவு, கொழுக்கட்டை பிடிக்கும் பதத்துக்கு வந்ததும் இறக்கி ஆறவைத்து, கொழுக்கட்டைகளாகப் பிடித்து, 10 நிமிடங்கள் ஆவியில் வைத்து எடுக்கவும்.

பலன்கள்: சோளத்தில் புரதம், மாவுச்சத்து, இரும்பு சத்து, இரும்புச்சத்து, பீட்டாகரோடின் போன்ற பல சத்துக்கள் உள்ளன. பார்வைக் குறைபாட்டைச் சரி செய்யும். வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. ரத்தத்தில் வெல்லம் / கருப்பட்டி யின் அளவைக் கட்டுப்படுத்த உதவும். சிறுநீரைப் பெருக்கும். உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் துர்நாற்றத்தைப் போக்கும். மூல நோய் உள்ளவர்கள் சோளத்தைத் தவிர்ப்பது நல்லது.

18) கேழ்வரகு இட்லி :

செய்முறை: தலா 200 கிராம் கேழ்வரகு, இட்லி அரிசி எடுத்துக் கொள்ளவும். இதனுடன், 100 கிராம் பச்சரிசி சேர்த்து, நன்றாகக் கழுவி எட்டு மணி நேரம் ஊற வைக்கவும். 400 கிராம் உளுந்தைத் தனியாக ஊற வைக்கவும். ஊறிய உளுந்தில் தண்ணீர் தெளித்து அரைக்கவும். அரிசியையும் கேழ்வரகையும் அரைத்து எடுத்து, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலக்கி, எட்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, இட்லி தட்டில் மாவை ஊற்றி, வேக வைத்து எடுக்கவும்.

பலன்கள்

இரும்பு சத்து, இரும்புச்சத்து, நார்ச்சத்து நிறைந்தது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், சக்கரை நோயாளிகள், வயதானோர் என அனைவரும் சாப்பிடலாம்.

19) குதிரைவாலி கேப்பைக் கூழ் :

செய்முறை: முந்தைய நாள் இரவே 200 கிராம் கேழ்வரகு மாவில் தண்ணீர் ஊற்றி, தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்து மூடிவைக்கவும். நன்றாகப் புளித்துவிடும்.

50 கிராம் குதிரைவாலி அரிசியை நன்றாகக் களைந்து தண்ணீர்விட்டு வேக வைத்துக்கொள்ளவும். அரைப் பதத்தில் வெந்ததும், ஊறவைத்த கேழ்வரகு மாவைச் சேர்த்து கெட்டியாகும் வரை அடுப்பில் வைத்துக் கிளறவும்.

தண்ணீரில் கையை நனைத்துவிட்டு, கூழைத் தொட்டுப்பார்த்தால், அது கையில் ஒட்டாமல், அல்வா பதத்தில் இருக்கவேண்டும்.

பிறகு, கால் கிண்ணம் தயிர், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், வெந்த கூழ் மூன்றையும் சேர்த்து, தேவையான உப்பு போட்டு, தண்ணீர் விட்டுக் கரைத்துக் குடிக்கலாம்.

பலன்கள்

இரும்பு சத்து இருப்பதால் எலும்புகளுக்கு வலு சேர்க்கும். இரும்புச்சத்து இருப்பதால் ரத்த உற்பத்திக்கு உதவும். கொழுப்பைக் குறைக்கும். குதிரைவாலியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்னை வராமல் தடுக்கும். கேழ்வரகு உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தந்து வலுவைச் சேர்க்கும். எடை குறைக்க நினைப்பவர்கள் தினமும் சாப்பிடலாம். பெண்கள், இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்ல உணவு.

20) கம்பு காய்கறி கஞ்சி:

அரை கிண்ணம், கம்பை நன்றாகச் சுத்தம் செய்து ஊறவைக்கவும். இதனுடன், மூன்று கிண்ணம் (மஞ்சள் முள்ளங்கி(கேரட்), அவரை (பீன்ஸ்), பூக்கோவா (காலிஃபிளவர்), பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வேகவைத்து அரைத்த விழுது) அரை தேக்கரண்டி அளவுக்கு சீரகம், மிளகு, 1 பிரியாணி இலை, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, இரண்டு கிண்ணம் தண்ணீர் விட்டு வேகவைக்கவும். வெந்ததும், பிரியாணி இலையை எடுத்துவிட்டு, கலவையை மின் அம்மியில் அரைத்துக்கொள்ள வேண்டும்.

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, அரை தேக்கரண்டி கடுகு மற்றும் மூன்று பல் பூண்டு சேர்த்துத் தாளித்து, அரைத்த சாறு கலவையில் சேர்த்துக் கொதிக்கவிடவும். தேவைப்பட்டால், சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். இதில், எலுமிச்சைப் பழச்சாறு, உப்பு, மிளகுத் தூள் சேர்த்துப் பருகலாம்.

பலன்கள்: ரத்தசோகை இருப்பவர்களுக்கு சரியான உணவு, கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிடவேண்டும். குழந்தைகளுக்கு அடிக்கடி தரலாம், பதின்ம வயது பெண்கள், வளரும் குழந்தைகள், அடிக்கடி கம்பு உணவை சேர்த்துக்கொண்டால், உடல் நன்கு வலுப்பெறும். தேவையற்ற கொழுப்பைக் கரைத்து உடல் எடையைச் சீராக்கும். சக்கரை நோயாளிக்கும் ஏற்றது. பார்வைத்திறன் மேம்படும். உடல் சூட்டைத் தணிக்கும். செரிமானக் கோளாறு, வயிற்றுப் புண்கள், குடல் புண்களை ஆற்றும். மலச்சிக்கலைத் தடுக்கும். மன அழுத்தத்தைக் குறைக்கும்.

21) சிறுதானியக் கஞ்சி:

செய்முறை

தினையோ, சாமையோ எதுவானாலும் மின் அம்மியில் ஒரு முறை சுற்றி, இரண்டாக உடைத்துக்கொள்ளவும். அரை குவளை தானியத்துக்கு மூன்று குவளை தண்ணீர் சேர்த்து, நன்றாக வேகவைத்து, மலர்ந்ததும் இறக்கவும். இனிப்பு வேண்டுமானால், பனை வெல்லத்தைக் காய்ச்சி, வடிகட்டி, அந்தப் பாகைத் தேவைக்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம். ஏலக்காய், தேங்காய்ப்பூ, உப்பு சேர்த்துப் பரிமாறுங்கள். இல்லையெனில், மோர் சேர்த்து, சின்ன வெங்காயம், இஞ்சி, உப்பு சேர்த்துப் பருகலாம்.

இதற்கு, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, கொள்ளு எனச் சுவையான துவையல்களைத் தொட்டுக்கொள்ளலாம். தினம் ஒரு கீரைகூடச் சேர்த்துக்கொள்ளலாம்.

பலன்கள்: அரிசி, கோதுமை தராத சமச்சீர் ஊட்டச்சத்துக்கள் அடங்கிய, உணவாக அமைவதால் உடல் வலுபெறும். நோய் நெருங்காமல் ஆரோக்கியமாக இருக்க சிறுதானியக் கஞ்சியும், கூழும் உதவி செய்யும்.

அதிகமாக மது அருந்துபவர்களுக்கு, உடல் பருமன் ஏற்பட்டு, செரிமானமின்மையால், பித்தக்கற்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அவர்களுக்கு வரகு உணவு நல்ல மருந்து. குடல்புண் மற்றும் உணவுக்குழாயில் ஏற்படும் புண்ணுக்கு சாமை நல்ல மருந்து. உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றின் அளவையும் கட்டுக்குள் வைக்க உதவும். இளைத்த உடல் வலுவாகவும் உடல் எடை கூடவும் தினை உதவுகிறது.

வயதானவர்களுக்கு மூட்டுகளில் உள்ள தேவையற்ற நீரினை நீக்க, தினை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். மேலும், நாள்பட்ட சிறுநீரகக் கோளாறுகள் (Chronic renal disease), கால் வீக்கம், முக வீக்கம் ஆகியவற்றைக் குறைக்க உதவும். குழந்தை பெற்ற பெண்களுக்கு கர்ப்பப்பையில் உள்ள கசடுகளை வெளியேற்றவும், தாய்ப்பால் சுரக்கவும் தினை கைக்கொடுக்கும்.

பட்டைத் தீட்டப்படாத சிவப்பு அரிசியில் நார்ச்சத்து, வைட்டமின்- டி1 நிறைந்துள்ளன. இதனால், வாய் ஓரங்களில் ஏற்படும் புண் (Angular cheilitis) குணமாகும். சக்கரை நோய் கட்டுப்படும். புரதம் அதிகம் இருப்பதால், எலும்புகளின் வளர்ச்சிக்குப் பயன்படுகிறது. கேழ்வரகு நார்ச்சத்து நிறைந்த உணவு. இதில் அமினோ அமிலங்கள், லிசித்தின் மற்றும் மெத்யோனைன் போன்றவை அடங்கியுள்ளன.

கல்லீரல் பாதிப்பு மற்றும் சிறுநீரகப் பாதிப்பு அடைவதால் ஏற்படும் பெருவயிறு நோய் இருப்பவர்களுக்கு, கேழ்வரகுக்கூழ் அற்புதமான உணவு. பித்தத்தால் ஏற்படும் உடல் வெப்பத்தைக் கேழ்வரகு கட்டுப்படுத்தும். இதில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து இருப்பதால், ரத்தச்சோகையைக் கட்டுப்படுத்துகிறது.

உடலில் சக்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும், குடல் புற்றுநோயினைத் தவிர்க்கவும் உதவுகிறது. கேழ்வரகு பாதாம் கஞ்சியைக் குடிப்பதால், சதைகளுக்கு ஊட்டம் கிடைக்கும். வைரல் காய்ச்சலில் குணமடைந்தவர்களுக்கு, மூட்டுகளில் வலி ஏற்பட வாய்ப்பு உண்டு. இதனைக் குறைக்க, கேழ்வரகு பாதாம் கஞ்சி பயன்படும். சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் பிரைமரி காம்ப்ளெக்ஸை (Primary complex) கட்டுப்படுத்த உதவும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

22) தினை இலட்டு:

செய்முறை : வெறும் கடாயில் சுத்தம் செய்த ஒரு ஆழாக்கு தினையை வறுத்துக்கொள்ளவும். ஆறியதும் மின் அம்மியில் பொடிக்கவும். ஒரு கட்டி அல்லது தேவையான அளவு வெல்லத்தைத் தூளாக்கிக்கொள்ளவும். தினை மாவு, வெல்லத்தூளுடன், தேன், தேங்காய்த் துருவல் தலா 4 மேசைக் கரண்டி சேர்த்து, ஒரு தேக்கரண்டி நெய் விட்டு, சிறிது தண்ணீர் விட்டு உருண்டைகளாகப் பிடித்துவைக்கவும்.

பலன்கள்:

அதிக அளவு புரதச் சத்து கிடைக்கும். உடல் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை நுண் தாதுச்சத்துக்கள் நிறைந்தது. தினமும் குழந்தைகளுக்கு ஒரு தினை இலட்டு கொடுப்பது, அவர்களின் ஆரோக்கியத்துக்கு துணைபுரியும். இதயத்தைப் பலப்படுத்தும். உடல் வலு பெறும். பசியை உண்டாக்கும்.

23) கேழ்வரகு உருண்டை:

செய்முறை : 200 கிராம் கேழ்வரகு மாவுடன் உப்பு சேர்த்து, தண்ணீர்விட்டு அடைகளாகத் தட்டி, காயும் தோசைக் கல்லில் போட்டு சுட்டு எடுக்கவும். மின் அம்மியில் ஆறிய கேழ்வரகு அடைகளைப் போட்டு, இரண்டு சுற்று சுற்றவும். இதில், வேர்க்கடலை, வெல்லம் சேர்த்து, மேலும் 2 முறை சுற்றி எடுக்கவும்.

இந்த கலவையை உருண்டைகளாகப் பிடித்து, குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். இனிப்பு பிடிக்கவில்லை என்றால், வெல்லத்துக்குப் பதிலாக மஞ்சள் முள்ளங்கி(கேரட்), கொத்தமல்லி, உப்பு சேர்த்து செய்யலாம்.

பலன்கள்: சத்துமாவு மாலை நேரச் சிற்றுண்டி. கேழ்வரகில் மாவுசத்து , இரும்பு சத்து சத்து மிக அதிகமாக உள்ளன. பொட்டாசியம், தையமின், ரிபோஃப்ளோவின், ஃபோலிக் அமிலம், மங்கனீஸ், தாமிரம், மக்னீஷியம், துத்தநாகம் ஓரளவு இருக்கின்றன. உடலுக்கு சக்தியைக் கொடுக்கும். மலச்சிக்கலைப் போக்கும். எளிதில் செரிமானமாகும். புரதம் வேர்க்கடலையில் உள்ள , வெல்லத்தில் இரும்புச்சத்து குழந்தையின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் உறுதுணைபுரியும்.

24) ‘கமகம’ கம்பு தயிர் சாதம்:

செய்முறை : ஒரு கிண்ணம் கம்பை சிறிது தண்ணீர் தெளித்துப் பிசறி வைக்கவும். சிறிது நேரம் கழித்து மின் அம்மியில் போட்டு இரண்டு முறை சுற்றி எடுக்கவும். பிறகு கம்பை ஒரு தட்டில் பரத்தி ஊதி, தோலை நீக்கவும். பிறகு, மீண்டும் மின் அம்மியில் போட்டு ரவைப்பதத்தில் உடைத்துக் கொள்ளவும்.

உடைத்த கம்புடன் 5 கிண்ணம் தண்ணீர் சேர்த்து, அழுத்தப் பாத்திரத்தில் மிதமான தீயில் வைக்கவும். நான்கைந்து விசில் வந்ததும் இறக்கி, பிரஷர் போனதும் திறந்து, ஒன்றரை கிண்ணம் பால் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

கடாயைக் காயவைத்து, 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு, ஒரு தேக்கரண்டி அளவுக்குக் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து, பொன்னிறமானதும், கறிவேப்பிலை, 2 காய்ந்த மிளகாயைக் கிள்ளிப்போடவும். 2 பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும். இதைக் கம்பு சாதத்துடன் சேர்க்கவும்.

கடைசியாக, உப்பு, தயிர், தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாகக் கிளறிப் பரிமாறவும்.

பலன்கள்: கம்பு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். ஆரோக்கியமான சருமத்துக்கு நல்லது. கண் பார்வை தெளிவடையும். உடல் சூட்டைக் குறைக்கும். வாய்ப்புண், மலச்சிக்கல் பிரச்னையைப் போக்கும்.

25) கொள்ளு ரசம்:

தேவையானவை: கொள்ளு – அரை கிண்ணம், புளி – 50 கிராம், மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை, மல்லி, மிளகு – தலா ஒரு தேக்கரண்டி, சீரகம் – 2 தேக்கரண்டி, தக்காளி – 2, பூண்டு – 3 பல், பச்சை மிளகாய் – 2, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – 3 தேக்கரண்டி, கடுகு, சீரகம் – தலா அரை தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் – 1.

செய்முறை: கொள்ளை ஊறவைத்து அலசி, தண்ணீர் சேர்த்து வேகவைத்து, மசித்துக் கொள்ளவும். ரசப்பொடிக்கான மிளகு, சீரகம், மல்லியை மின் அம்மி அல்லது அம்மியில் பொடித்துக்கொள்ளவும். புளியை ஊறவைத்துக் கரைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மசித்த கொள்ளு, தண்ணீர், அரைத்த பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, இளஞ்சூட்டில் வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைப் போட்டுத் தாளித்து, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, அதை, ரசத்தில் கொட்டி இறக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையைச் சேர்க்கவும்.

பலன்கள்: கொள்ளு, கொழுப்பைக் குறைக்கும் என்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்குச் சிறந்த தேர்வு. கோடையிலும் சளித் தொல்லையால் அவதிப்படுபவர்கள், இந்த ரசத்தை அருந்தலாம்.

26) கதம்ப சிறுதானிய கஞ்சி:

தேவையானவை: குதிரைவாலி, வரகு, சாமை, பாசிப்பருப்பு – தலா 50 கிராம், தேங்காய்ப்பால் – ஒரு கிண்ணம், பூண்டு – 4 பல், மிளகுத் தூள், உப்பு – சுவைக்கேற்ப, கறிவேப்பிலை – சிறிதளவு, நல்லெண்ணெய் – ஒரு தேக்கரண்டி, பச்சை மிளகாய் – 2, சின்ன வெங்காயம் – 10, சீரகம் – அரை தேக்கரண்டி.

செய்முறை: அனைத்து சிறுதானியங்களையும் கழுவி, சுத்தம் செய்து, தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும். தானியங்கள் ஊறிய தண்ணீரோடு அப்படியே அடுப்பில்வைத்து, பாசிப்பருப்பு சேர்த்து, கஞ்சிப் பதம் வரும் வரை வேகவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, வேகவைத்த கலவையை ஊற்றிக் கொதிக்கவிடவும். பிறகு, தேங்காய்ப்பால் ஊற்றி இறக்கவும். தேவையான அளவு, உப்பு, மிளகுத் தூள் சேர்த்துப் பரிமாறவும்.

பலன்கள்: எரிசக்தி (கலோரி) குறைவு என்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு நிறைவான உணவு. இதில் கிடைக்கும் குளுக்கோசு உடலுக்கு உடனடி சக்தியைத் தரும்.

27) தினை இனிப்புப் பொங்கல்:

தேவையானவை: தினை அரிசி – 100 கிராம், பாசிப்பருப்பு – 30 கிராம், வெல்லம் – 200 கிராம், நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய் – சிறிதளவு, தண்ணீர் – 3 கிண்ணம், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: தினை அரிசி மற்றும் பாசிப்பருப்பைத் தனித்தனியே வறுத்து, நன்றாக ஊறவைக்கவும். அடி, கனமான பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி, வெல்லத்தைப் போட்டு, பாகு காய்ச்சவும். ஊறவைத்த தினை மற்றும் பருப்பை, தண்ணீரில் நன்றாக வேகவைக்கவும். வெந்தவுடன் அதில் வெல்லப்பாகை ஊற்றவும். பொங்கல் பதம் வந்தவுடன், ஐந்து நிமிடங்கள் மூடிவைக்கவும். பிறகு, நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து, ஏலக்காயைப் பொடித்து, பொங்கலில் சேர்த்துப் பரிமாறவும்.

பலன்கள்: குளிர்ச்சித் தன்மையை அளிக்கும் உணவு இது. புரதச் சத்துக்கள் நிறைந்துள்ளன. சீக்கிரத்தில் செரிமானம் ஆகும். இரும்பு சத்து நிறைந்துள்ளதால் எலும்புகள் வலுப்பெறும்.

28) தினை தேன் புட்டு:

தேவையானவை: தினை மாவு (கடைகளில் தயாராகவும் கிடைக்கிறது) 200 கிராம், ஏலக்காய்த்தூள் சிறிதளவு, நெய் 2 தேக்கரண்டி, தேங்காய்த் துருவல் கால் கிண்ணம், தேன் 100 மில்லி, உப்பு ஒரு சிட்டிகை.

செய்முறை: தினை மாவில் உப்பு கலந்த சுடுநீர் தெளித்து ஆவியில் 20 நிமிடம் வேகவிட்டு எடுத்து, ஆறிய பின் உதிர்க்கவும். இதனுடன் தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், நெய், தேன் விட்டு பிசிறி பரிமாறவும்.

29)கேப்பை வெல்ல அல்வா:

தேவையானவை: கேப்பை (கேழ்வரகு) மாவு 100 கிராம், வெல்லம் 200 கிராம், நெய் 50 கிராம், எண்ணெய் 50 மில்லி, ஏலக்காய்த்தூள் சிறிதளவு, வறுத்த வேர்க்கடலை ஒரு தேக்கரண்டி.

செய்முறை: கேப்பை மாவை நீர் விட்டு தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும். வெல்லத்தை நீர் விட்டு கரைத்து வடிகட்டவும். கடாயை அடுப்பில் ஏற்றி வெல்லக் கரைசலை சேர்த்து கொதி வருகையில் கரைத்த கேப்பை மாவை ஊற்றவும். கலவை கெட்டியாகும்போது நெய், எண்ணெய் சேர்த்துக் கிளறி, பளபளவென மாவு வெந்து, கடாயில் ஒட்டாத பதத்துக்கு வரும்போது ஏலக்காய்த்தூள், வறுத்த வேர்க்கடலை சேர்த்து இறக்கவும். இதை அப்படியே பரிமாறலாம். சிறுகுண்டு / வில்லைகளாக்கியும் சாப்பிடலாம்.

30)நீராகாரம்:

தேவையானவை: சாதம் வடித்த கஞ்சி ஒரு கிண்ணம், சிலுப்பிய தயிர் அரை கிண்ணம், முதல் நாள் இரவு வடித்த சாதத்தின் மீது ஊற்றிய நீர் ஒரு கிண்ணம் (சாதத்தை நன்கு கிளறி அது மூழ்கும் வரை நீர் விடவும்), உப்பு தேவையான அளவு, நறுக்கிய வெங்காயம் ஒரு கைப்பிடி அளவு.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை (வெங்காயம் தவிர) நன்கு கலந்து விளாவி, வெங்காயம் தூவி பரிமாறவும். விருப்பப்பட்டால், பச்சை மிளகாயை கடித்துக்கொண்டு நீராகத்தை பருகலாம். இது கிராமத்தினர் பலரின் வழக்கம்.

31)பானகம் :

தேவையானவை: வெல்லம் / கருப்பட்டி – 200 கிராம், புளி – 50 கிராம், பொடித்த சுக்கு – ஒரு தேக்கரண்டி, உப்பு, மஞ்சள் தூள் – தலா ஒரு சிட்டிகை, ஏலக்காய் – 2, புதினா இலைகள் – 5, எலுமிச்சைப் பழம் – 1.

செய்முறை: வெல்லத்தைச் சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். புளியையும் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். வெல்லக் கரைசலுடன், புளித் தண்ணீரையும் சேர்த்து, சுக்குத் தூள், உப்பு, மஞ்சள் தூள், ஏலக்காய்த் தூள் அனைத்தையும் சரியான விகிதத்தில் கலக்கவும். பிறகு, அதில் எலுமிச்சைச் சாறு, புதினா இலைகள் சேர்த்துப் பரிமாறவும்.

பலன்கள்: உடலில் நீர் வறட்சியை சரி செய்யும். தேவையான நீர்ச் சத்தைக் கொடுத்து, வெயில் கால நோய்களிலிருந்து காக்கும். கோடைக்கு ஏற்ற பானம் இது. ஆனால் இரண்டு குவளைக்கு மேல் குடித்தால் வயிற்றுப்போக்கு ஏற்படம்.

32) தாகமுக்தி (நன்னாரி குடிநீர்):

தேவையானவை: வெட்டிவேர், நன்னாரி, சுக்கு, ஏலக்காய், மாகாளிக் கிழங்கு வேர் – தலா ஒரு கைப்பிடி அல்லது தேவைக்கேற்ப.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் குடிநீரை ஊற்றிக் கொதிக்கவிடவும். நீர் கொதித்தவுடன், கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து, கொதிக்கவிட்டு, வடிகட்டிக் குடிக்கவும். மிகவும் மணமுடன் இருக்கும். பலன்கள்: உள்ளுறுப்புகளையும் ரத்தத்தையும் சுத்தம் செய்யும். உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் தொற்றுகளைச் சரிசெய்யக்கூடியது.

33) நன்னாரி, வெட்டிவேர் சாறு:

தேவையானவை: நன்னாரி, வெட்டிவேர், வெல்லம் – தலா 50 கிராம்.

செய்முறை: நன்னாரியை சுத்தம் செய்து சிறு, சிறு துண்டுகளாக்கிக்கொள்ளவும், வெட்டி வேரையும் சிறு துண்டுகளாக்கவும். ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்த்து 2-3 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவைக்கவும். பிறகு, இறக்கி வடிகட்டிக்கொள்ளவும். வடிகட்டிய கஷாயத்துடன் பொடித்த வெல்லம் சேர்த்து அடுப்பில் ஏற்றி காய்ச்சி, வெல்லம் உருகி பாகுப் பதம் வந்ததும் இறக்கி, மீண்டும் வடிகட்டி உபயோகப்படுத்தவும். ஒரு பங்கு சாறு, ஒரு பங்கு குளிர்ந்த நீர் சேர்த்துப் பரிமாறலாம்.

மருத்துவப் பலன்கள்: வெயில் காலத்தில் உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும் பாரம்பரிய பானம் இது.

34) இதய பானம் :

தேவையானவை: இஞ்சி, பூண்டு – தலா அரை கிலோ, எலுமிச்சம் பழம் – 20, தேன் – 300 மி.லி, ஆப்பிள் காடி (சிடர் வினிகர்) – 50 மி.லி

செய்முறை: இஞ்சி, பூண்டை சுத்தம் செய்து, சிறிதளவு நீர் விட்டு அரைத்து சாறாக்க வேண்டும். அடி கனமான பாத்திரத்தில் இந்த சாறை ஊற்றி, அடுப்பை மிதமான நெருப்பில் வைத்து, அரை மணி நேரம் சூடாக்க வேண்டும். இதனுடன் எலுமிச்சை சாறு கலந்து 20 நிமிடங்கள் அடுப்பில் வைக்க வேண்டும். இஞ்சி, பூண்டுடன் எலுமிச்சை சாறு சேருவதால் திரிய வாய்ப்பு இல்லை. இந்தக் கலவை ஆறியதும், 300 மி.லி தேனும், 50 மி.லி ஆப்பிள் சிடர் வினிகரும் கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளலாம்.

பலன் : தினமும் 5 – 10 மி.லி கசாயத்துடன் சிறிது நீர் கலந்து அருந்தலாம். மூன்று மாதங்கள் வரை இந்த கஷாயத்தைக் குடித்துவந்தால், உடலில் உள்ள கொழுப்பின் அளவு குறையும். இதயத்தின் ஆற்றல் அதிகரிக்கும். மாரடைப்புக்கான வாய்ப்பு பெருமளவு குறையும்.

35) புதினா- இஞ்சி பானம் :

தேவையானவை: ஆய்ந்த புதினா இலை – 15, இளம் இஞ்சி – சிறிய துண்டு, எலுமிச்சைச் சாறு – அரை தேக்கரண்டி, வெல்லம் – 4 சிறு கரண்டி, குளிர்ந்த நீர் – 200 மில்லி (ஒரு குவளை), உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: புதினா, இஞ்சி, உப்பு, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றுடன் சிறிதளவு நீர் சேர்த்து விழுதாக்கவும். இதை மீதமுள்ள குளிர்ந்த நீரில் கரைத்து, வடிகட்டி, சர்க்கரை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

36)எலுமிச்சை – ஏலக்காய் பானம் :

தேவையானவை: குளிர்ந்த பானை நீர் – 200 மில்லி (ஒரு குவளை), ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, பொடித்த வெல்லம் – 5 தேக்கரண்டி, உப்பு – கால் சிட்டிகை, எலுமிச்சைப் பழம் – அரை மூடி (சாறு எடுக்கவும்).

செய்முறை: குளிர்ந்த நீருடன் பொடித்த வெல்லம் , உப்பு, ஏலக்காய்த்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கி பரிமாறவும். வெல்லத்திற்குப் பதிலாக தேவையான அளவு கருப்பட்டி சேர்த்தும் தயாரிக்கலாம். இது உடனடி சக்தி தரக்கூடிய பானம்.

37) வெல்லம் – சுக்கு பானகம்:

தேவையானவை: பொடித்த வெல்லம் – 50 கிராம், சுக்குப்பொடி(இஞ்சிப் பொடி) – 2 சிட்டிகை, ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு – அரை தேக்கரண்டி

செய்முறை: வெல்லத்தில் முக்கால் கிண்ணம் பானை நீர் விட்டு கரைத்து அடுப்பில் ஏற்றி, ஒரு கொதி வந்தவுடன் இறக்கி, வடிகட்டி ஆறவிடவும். இதனுடன் சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள், எலுமிச்சைச் சாறு, ஒரு குவளை பானை நீர் சேர்த்துக் கலந்து அருந்தவும்.

38) சத்து கஞ்சி

தேவையானவை: கோதுமை, கழுவிக் காயவைத்த கேழ்வரகு, பொட்டுக் கடலை, வால்கோதுமை அரிசி, சவ்வரிசி, பாசிப்பயறு – முறையே அரை ஆழாக்கு, கசகசா – கால் ஆழாக்கு, ஓமம் – ஒரு தேக்கரண்டி.

செய்முறை: எல்லாவற்றையும், வெறும் கடாயில் தனித்தனியே வறுத்து, ஒன்றாகச் சேர்த்துப் பொடித்துச் சலித்துவைத்துக் கொள்ளவும்.

இந்தப் பொடியில் ஒரு கரண்டி எடுத்து, ஒரு குவளை தண்ணீரில் கரைத்து, கொதிக்கவைத்துப் பால் சேர்த்துக் குடித்தால், தெம்பு கிடைக்கும். சோர்வே இருக்காது.

மருத்துவப் பலன்கள்: வயிற்றுப்போக்கு ஏற்பட்ட பிறகு, சாப்பிடக் கூடிய மித உணவு. ஓமம் இருப்பதால், செரிமானத்துக்கு உதவும்.

39) நுங்கு கூழ் :

தேவையானவை: தோல் உரித்து நறுக்கிய நுங்குத் துண்டுகள் – ஒரு கிண்ணம் , இளநீர் – அரை கிண்ணம் , பொடித்த வெல்லம் – 2 தேக்கரண்டி , பால் – கால் குவளை.

செய்முறை: பால் தவிர பிற பொருட்களைக் கலந்து குளிர் பெட்டியில் அரை மணி நேரம் வைத்து, மேலே பால் ஊற்றி, கண்ணாடி குவளை (அ) கிண்ணத்தில் போட்டு பரிமாறவும்.

40) புதினா மோர்:

தேவையானவை: மோர் – முக்கால் குவளை , புதினா – கொத்தமல்லி – இஞ்சி விழுது – அரை தேக்கரண்டி , உப்பு – கால் தேக்கரண்டி , குளிர்ந்த பானை நீர் – கால் குவளை , எலுமிச்சைச் சாறு – அரை தேக்கரண்டி .

செய்முறை: மோர், உப்பு, புதினா – கொத்தமல்லி – இஞ்சி விழுதை சேர்த்து மின் அம்மியில் நுரைக்க அடித்து, எலுமிச்சைச் சாறு, குளிர்ந்த பானை நீர் சேர்த்துப் பரிமாறவும்.

41) ஆவாரம் பூ தேநீர்:

தேவையானவை: ஆவாரம் பூ – 10, லவங்கப் பட்டை – சிறு துண்டு.

செய்முறை: சுத்தம் செய்த ஆவாரம்பூவை ஒரு குவளை தண்ணீரில் சேர்த்து, லவங்கப் பட்டை சேர்த்து 2-5 நிமிடங்கள் மூடி போட்டு, மிதமான தீயில் கொதிக்கவைக்கவும். பிறகு, இறக்கி வடிகட்டி, சூடாக அருந்தலாம். வெல்லம் / கருப்பட்டி அல்லது தேன் சேர்க்கத் தேவை இல்லை.

மருத்துவப் பலன்கள்: ரத்தத்தில் சக்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவும். நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு மாற்று தேநீர்.

42) மூலிகை தேநீர் :

தேவையானவை: கிராம்பு, ஏலக்காய் – தலா 2, கொத்தமல்லி விதை, மிளகு – தலா அரை தேக்கரண்டி , சீரகம், சுக்குப்பொடி – தலா ஒரு தேக்கரண்டி , கருப்பட்டி (அல்லது) வெல்லம் – 5 கிராம்.

செய்முறை: இருப்புச்சட்டியைச் சூடாக்கி, மிளகு, சீரகம், கிராம்பு, ஏலம் என ஒவ்வொன்றாகப் போட்டு, ஒரு கிளறு கிளறி, அடுப்பை அணைத்துவிடவும். இளம் சூட்டிலேயே மின் அம்மியில் போட்டு (கொத்தமல்லி விதை பொடித்து) அரைக்கவும்.

தேநீர் போடும்போது, ஒரு குவளை தண்ணீரைக் கொதிக்கவைத்து, கருப்பட்டியைத் தட்டிப்போட்டு, நன்கு கொதித்ததும் சுக்குப்பொடி, மூலிகைப்பொடி இரண்டையும் தலா அரை தேக்கரண்டி போட்டு, அடுப்பை அணைத்து, தட்டுப் போட்டு மூடிவிடவும். ஐந்து நிமிடங்கள் கழித்து, வடிகட்டிச் சூடாக அருந்தலாம்.

குறிப்பு: தேநீரில் வேறு வாசனை வேண்டும் என நினைத்தால், கொதிக்கும்போது துளசி இலைகளைச் சேர்க்கலாம். அல்லது கால் தேக்கரண்டி தேநீர் தூள் சேர்த்துக் கொதிக்கவிடலாம்.

பலன்கள்: – ஹெர்பல் டீ தும்மல், தடுமனைக் குறைக்கும். – கபத்தைக் குறைக்கும். – குளிர்காலத்தில் இருக்கும் மந்தத்தன்மையைப் போக்கி, நன்கு பசியெடுக்கச் செய்யும்.

43) சுக்கு மல்லி குழம்பி:

தேவையானவை: மல்லி விதை – 2 மேசைக் கரண்டி, மிளகு, குழம்பி (காபி) தூள், சீரகம், ஓமம் – தலா ஒரு மேசைக் கரண்டி, காய்ந்த இஞ்சி (எ) சுக்கு – ஒரு துண்டு, கருப்பட்டி – தேவையான அளவு, துளசி – கைப்பிடி.

செய்முறை: எல்லாவற்றையும் இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்துகொள்ளவும். தண்ணீரைக் கொதிக்கவைத்து இந்தப் பொடியையும் கருப்பட்டியும் சேர்த்து, 4 நிமிடங்கள் கொதித்த பிறகு கொஞ்சம் துளசியும் சேர்க்கவும். பிறகு இறக்கி, வடிகட்டிக் குடிக்கலாம். விருப்பப்பட்டால், பால் சேர்த்துக்கொள்ளலாம்.

மருத்துவப் பலன்கள்: உணவை எளிதில் செரிமானிக்க உதவும். சளி வராமல் தடுக்கும். பெரிய விருந்துக்குப் பின், சுக்குக் குழம்பி அருந்தலாம்.

44) இஞ்சி தேனூறல்

தேவையானவை: இஞ்சி – 100 கிராம், தேன் – தேவையான அளவு.

செய்முறை: இஞ்சியை நன்றாகக் கழுவி, தோல் நீக்கி, மெல்லியதான வட்ட வடிவ வில்லைகளாக நறுக்கிக்கொள்ளவும். இதை ஒரு பாட்டில் அல்லது சாடியில் போட்டு, அது மூழ்கும் அளவு தேனை ஊற்றி, இறுக்கமாக மூடிவைத்துவிடவும். நான்கு ஐந்து நாட்களில், அது நொதித்து, நுரைத்தாற்போல் வரும். இந்தச் செய்கை, நல்ல நுண்ணுயிரால் (பாக்டீரியா) இப்படி நிகழும். ஏழு, எட்டு நாட்கள் கழித்து, நுரைத்தல் தானாகவே அடங்கிவிடும். 10 நாட்கள் கழித்து, தேனில் இஞ்சி நன்கு ஊறி இருக்கும். தினமும் காலை மாலை எடுத்துச் சாப்பிடலாம். ஒரு முறை தயாரித்த தேனூறலை இரண்டு, மூன்று மாதங்களுக்கு வைத்துக்கொள்ளலாம்.

பலன்கள்: – இஞ்சி, வாதத்தைத் தடுக்கக்கூடியது. வாதம், பித்தம், கபம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். – செரிமானத்துக்கும் நல்லது. – ஆண்களுக்கு குறி விறைப்பின்மையை போக்க உதவும்

45) திப்பிலி ரசம்:

தேவையானவை: ரசப்பொடி, சீரகம், வறுத்த வெந்தயம், பெருங்காயம், கொத்தமல்லி , மிளகு, காய்ந்த மிளகாய், புளி, திப்பிலி இலை – 4, பருப்புத்தண்ணீர், உப்பு, தாளிக்க: கடுகு, சீரகம், நெய்.

செய்முறை: புளியைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டி, ரசப்பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். பச்சை வாசனை போனதும், பருப்புத் தண்ணீரைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும், சின்னதாக நறுக்கிய திப்பிலி இலையைச் சேர்த்து, அடுப்பை அணைத்துவிடவும். கடைசியாக நெய்யில் தாளித்துக் கொட்டி மூடவும். மாற்று முறை: கரைத்துவைத்த புளித் தண்ணீரில் ரசப்பொடியைச் சேர்த்துக் கலந்து, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். திப்பிலி இலையை அரைத்து, பருப்புத் தண்ணீருடன் சேர்த்து ஒரு கொதி கொதிக்கவிடவும். கடைசியாகத் தாளித்துக் கொட்டி மூடவும்.

பலன்கள்: சளித் தொல்லை, இருமல், குழந்தைகளுக்கு ஏற்படும் ஆசுத்துமா போன்ற நோய்களுக்கு இந்த ரசத்தை இளஞ்சூட்டில் அருந்தலாம்.

46) நெல்லிக்காய் ரசம்:

தேவையானவை: நெல்லிக்காய் – 2, இஞ்சி – 5 கிராம், புளி – சுண்டைக்காய் அளவு, உப்பு – தேவையான அளவு, பருப்பு வேகவைத்த நீர் – ஒரு கிண்ணம், ரசப்பொடி – ஒரு கரண்டி. தாளிக்க: நெய் அல்லது எண்ணெய் – ஒரு தேக்கரண்டி, சீரகம், கடுகு – தலா ஒரு தேக்கரண்டி. ரசப்பொடி செய்முறை: சீரகம் – ஒரு தேக்கரண்டி, வறுத்த வெந்தயம், பெருங்காயம் – தலா அரை தேக்கரண்டி, தனியா – 2 தேக்கரண்டி, மிளகு – ஒரு தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் – 3, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு – தலா ஒரு தேக்கரண்டி. இவை எல்லாவற்றையும் காயவைத்து, குருணையாகப் பொடித்துக்கொள்ளவும்.

செய்முறை: இஞ்சியைத் துருவிக்கொள்ளவும். புளியை ஊறவைத்துத் தண்ணீரை வடிகட்டிக்கொள்ளவும். நெல்லிக்காய், இஞ்சியை மின் அம்மியில் விழுதாக அரைத்து, புளித் தண்ணீருடன் சேர்த்து உப்பு, ஒரு தேக்கரண்டி ரசப்பொடி, பருப்புத் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைக்கவும். கடாயில் நெய்/எண்ணெய் விட்டு, கடுகு தாளித்துக் கொட்

47) இடித்த இஞ்சி ரசம்:

தேவையானவை: நாட்டுத் தக்காளி 2, இஞ்சி ஒரு இஞ்ச் அளவு துண்டு, பருப்பு நீர் 2 கிண்ணம்(50 கிராம் துவரம்பருப்பை வேகவிட்டு, தண்ணீர்விட்டு கரைக்கவும்), மஞ்சள்தூள், புளி சிறிதளவு, பூண்டு 2 பல், சீரகம் அரை தேக்கரண்டி, மிளகு ஒரு தேக்கரண்டி, பெருங்காயம் ஒரு சிறுகட்டி (தூளாக்கவும்), கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, கடுகு சிறிதளவு, நெய் ஒரு தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு.

செய்முறை: தக்காளியை நறுக்கவும். இஞ்சியை இடித்துக் கொள்ளவும். பூண்டு, சீரகம், மிளகு ஆகியவற்றை அம்மி (அ) உரலில் நசுக்கிக்கொள்ளவும் (மின் அம்மியிலும் பொடிக்கலாம்). மண்சட்டி அல்லது வாணலியில் நெய்யை சூடாக்கி கடுகு, பெருங்காயம் தாளிக்கவும். நறுக்கிய தக்காளி, இடித்த இஞ்சி, மஞ்சள்தூள் சேர்த்து, வதங்கியபின் புளி, உப்பு, பருப்பு நீர் சேர்க்கவும். நசுக்கிய பூண்டு சீரகம் மிளகு சேர்த்து ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவி இறக்கி சூடாக பரிமாறவும். இது இருமலைத் தணிக்க உதவும்.